உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?
நீச்சல் தெரியாத ஒருவன் கிணறு ஒன்றில் தவறி விழுந்து விட்டான்.
தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வந்தவன், “என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்றபடி தத்தளித்துக் கொண்டிருந்தான்.
அவன் கூச்சலைக் கேட்ட பலர் கிணற்றினருகில் கூடி விட்டனர்.அவர்களுள் ஒருவன், எப்படியாவது கிணற்று நீரில் போராடிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.
உடனே அவன் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு. உன் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறேன்.” என்று கத்தினான்.
ஆனால், தத்தளித்துக் கொண்டிருந்தவனோ கையை நீட்டவில்லை. தண்ணீரைக் கையிலடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
கரையிலிருந்தவன் மீண்டும் அவனைப் பார்த்து, “உன் கையை மட்டும் நீட்டு, நான் உன்னைக் காப்பாற்றி விடுகிறேன்” என்றான்.
அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “நீ உண்மையிலேயே அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், உன் கையை நீட்டி அவன் கையைப் பிடித்து வெளியே இழு. நீ எத்தனை முறை கத்தினாலும் அவன் கையை நீட்டப் போவதில்லை.
உதவி செய்கிறவன்தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, உதவி கேட்பவன் அல்ல.” என்றார்.
உண்மை உணர்ந்த அவன்,உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனின் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினான்.
0 comments:
Post a Comment