.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 19, 2014

ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜின் புதிய தொடர்..!



 ஒவ்வொருவருக்குமே தாங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில், ஒர் அலாதியான சுகம் இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்வதற்கும், டைரி எழுதுவதற்கும் கூட, ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. நம் நினைவுக் குளங்களில் படர்ந்திருக்கும், பாசியின் மேல் கல்லெறிவதில் ஒரு பேரானந்தம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணர்வைதான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது நான் நடந்து வந்த பாதை அல்லது எனது வாழ்க்கையை பற்றிய சுயதம்பட்டமோ அல்ல. இது நான் மனக்கிடங்கில், சேமித்து வைத்த நினைவுகளின் அணிவகுப்பு. இதில், நான் மட்டும் தெரியப் போவதில்லை... நீங்களும்தான்.

எனது பால்யம் என்பது எனது பால்யம் மட்டுமா? அது உங்களுடையதும்தான்! எனது அவமானம், வெற்றி, தோல்வி, விருது எல்லாம் என்னுடையது மட்டுமா என்ன? அவை அனைத்துமே நம்முடையது.

அப்படி இந்தத் தொடர் மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகள் மயில் தோகையாக மனதில் விரியலாம், ஞாபக அடுக்குகளில் என் வார்த்தைகள் பொருத்திப்போடும் தீக்குச்சிகள் பழைய நினைவுகளை சுட்டு எரிக்கலாம், சூத்திரவாலு, அறுந்தவாலு, கரட்டான் மண்டையன், பொண்ணுக்கு வீங்கி, அதிரடி குசுவுனி, அவசர குடுக்கை, வீத்தக்குட்டி, அராத்து என பட்டப்பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்த நண்பனும் தோழியும், நினைவில் வந்து போகலாம். சிமிட்டுக்கண்ணி, சில்க் சுந்தரி, புட்டம்மா சிட்டு ,

வேப்பெண்ணை தேச்ச தேவதை என நமது முதல் காதலிகள் கனவில் கடந்து போகலாம்,

ஒரு இலைய கட்டிக்கிறேன்,

ரெண்டு இலைய கட்டிக்கிறேன்,

மூணு இலைய கட்டிக்கிறேன்,

நாலு இலைய கட்டிக்கிறேன்,

அஞ்சலைய கட்டிக்கிறேன்னு

பாடி மகிழ்ந்து, டேய்... இவன் அஞ்சலை புள்ளைய கட்டிக்கிறேன்னு சொல்றான்டா, என கேலி செய்து அஞ்சலைய வெக்கப்பட வைத்து... உதிர்த்த சிரிப்பொலிகள் காதுகளில் ஒலிக்கலாம், ரெடியோர் ரெடி, கிளியோர் கிளி, கிக்கிலி பிக்கிலி, மக்கான், சுக்கான், பாலு பறங்கி, நாட்டும சீட்டும அதிரி , எங்க மாடு எளச்சு போச்சு, தண்ணிங்குடுறா கொள்ளப் பயலே... விளையாண்ட விளையாட்டுக்களும், மென் கவிதை, மென் தூறல் கவிதை, என ரசனை மாற்றம் ரசவாதமாய் நிகழ்ந்த காலம்..

மயிலிறகு ஒளித்து, குட்டி போடும் நாள் பார்த்து காத்திருந்தது, கட்டிபோட்டா குட்டி போடும் இலை சுமந்த புத்தங்களை நாம் சுமந்தது, 1001 முறை ஓம் முருகா ஓம் முருகா! என எழுதி அனுப்பி கந்த சஷ்டி புத்தகம் வாங்கியது, தேங்காய் உடைக்கப்போகும் அம்மாவிடம் டம்ளர் எடுத்து போய் தேங்காய் தண்ணீர் வாங்கி தேவாமிர்தம் போல் குடித்து மகிழ்ந்தது, மெட்ராஸ் ஐ வந்ததும் நண்பர்கள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து ஒனக்கும் ஒட்டி விட்டுருவேன்... என மிரட்டி தாத்தாவின் கண்ணாடியை பாட்ஷா கண்ணாடியாய் நினைத்து போட்டு ஸ்டைலாய் திரிந்தது, உள்ளூர் டூரிங் டாக்கீஸில் குடும்பத்தோடு அத்தை மகள் படம் பார்க்க செல்கிறாளே என அடம்பிடித்து... ‘இதயம்’ படம் குடும்பத்தோடு பார்த்தது,

ஊருக்கு முன்னாடி பள்ளிகூடத்துக்கு வந்து விட்டு இன்னைக்கு நான்தான் ஸ்கூல் first-னு தம்பட்டம் அடித்து திரிந்தது, பேரன், பேத்தி எடுத்துருந்தாலும்... ஏதோ ஒரு நினைவில்... தனக்கு பிடித்த ஒரு வாத்தியார்... நினைத்துப் பார்க்கும் ஒரு தருணம் வரும். அப்படி நமக்கு பிடித்த... குரு..! திருவுருவமாய் வந்து செல்லலாம்..! கொத்து கொத்து மாங்கா கோமாரி மாங்கா மதுரைக்கு போனாலும் வாடாத மாங்கா, அது என்ன? பல நேரம் விடை தெரியாத விடுகதை போட்டு சுற்றி திரிந்த காலங்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் “மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பாடலை”, பஸ்ஸை ஒரு பல்லாக்கு போல நினைத்து மேடு பள்ளங்களில் ஆடி ஆடி அசைந்து மிதந்து சென்றபடி நாங்களும் ராஜ ஊர்வலம் சென்று ரசித்த நாட்கள், “ஆசைய காத்துல தூதுவிட்டு” பாடலை தேசியகீதம் போல சிலோன் வானொலியில் கேட்டு கிறங்கி கிடந்த நினைவுகள், என பழசெல்லாம் படபடபடனு ஞாபகத்திற்கு வரப்போகிறது,

0 comments:

 
back to top