.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

தமிழ்ப் பழமொழியும் என் தாத்தனும்..!



 விசாரம் முற்றினால் வியாதி.
  • கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்.

 
பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

  • நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.

காற்றில்லாமல் தூசி பறக்காது.

  • நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி

பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

  • நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

 பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

  • துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்..?

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

  • பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி

 இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

  • விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

  • தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

வாங்குகிற கை அலுக்காது.


  • வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ..?

0 comments:

 
back to top