இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது முடிவை கைவிட்டார் கமல். இந்நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி வரும் கமல், இந்தமுறை படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. அதில் பேசிய கமல், விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, டி.டி.எச்.ல் படத்தை திரையிடுவதன் மூலம் அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும். டி.வி. மூலம் மட்டும் மக்கள் பார்க்கும் நிலை இருக்காது, வீட்டில் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலும் அப்படத்தை பார்க்க அவர்களுக்கு தூண்டும். ஆனால் இந்த முறையை எதிர்க்கிறார்கள். எல்லோரது வீட்டிலும் சமையல் அறை இருக்கிறது, ஆனால் அவர்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது இல்லையா, அதுபோலத்தான் இதுவும். இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிட எண்ணியுள்ளேன். ஒருவேளை இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் இப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார்.
ஆக விஸ்வரூபம்-2 படத்திற்கு அடுத்த பிரச்னை கிளம்பிவிட்டது. இந்தமுறை தியேட்டர் அதிபர்கள் என்ன சொல்ல போகிறார்களோ...?
0 comments:
Post a Comment