.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, October 26, 2013

கத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி?

ஆண்டில் டிசம்பர் - ஜனவரி, மே - ஜூன் மாதங்களில்தான் கத்தரி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகக் கருத்தப்படுகிறது. இந்த மாதங்களில் கத்தரி சாகுபடி செய்தால் அதிக மகசூலைப் பெறலாம்.


கத்தரி சாகுபடிக்கு கோ1, கோ2, எம்டியு1, பிகேஎம்1, பிஎல்ஆர்1, கேகேஎம்1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 400 கிராம் விதையே போதுமானது.


ஆனால், இந்தக் கத்தரி சாகுபடியைப் பூச்சி மற்றும் நோய்களிலிருந்து காக்க என்ன வழி என்பது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் கூறியது:


"கத்தரி நடவு செய்த 15-20 நாள்களில் கத்திரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்த தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் எனக் கூறப்படும் வெள்ளை நிற புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.


இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டைக் கிள்ளி எறிந்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்து விட வேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஓரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை எண்டோசல்பான் 2 மிóல்லியை ஓரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


அல்லது குயினால்பாஸ் 25இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்ப எண்ணெய் ஓரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 50 மில்லியை ஓரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


சாம்பல் நிற மூக்கு வண்டு: இந்த வகைப் பூச்சிகள் இலைகளிலுள்ள சாறினை உறிஞ்சுவதால், இலைகள் சக்தியிழந்து காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு கார்போக் பியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாள்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப் பாகத்தில் போட வேண்டும்.
நூற் புழுக்கள்: நூற் புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.


சிறப்பு சிலந்திப் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.


வெள்ளை ஈக்கள்: கோடை காலம் பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப் பொறி ஹெக்டருக்கு 12 வீதம் வைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திரவம் 1 மில்லியுடன் ஓரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.


இலைப்புள்ளி நோய்கள்: பருவமழைக் காலங்களில் வானம் மே மூட்டத்துடன் இருக்கும் சமயங்களில் இலைப்புள்ளி நோய் அதிகமாகக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.


வாடல் நோய்: இந்த நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள், காய்கள் வாடிவிடும். இதைக் கட்டுப்படுத்த விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது கேப்டான் அல்லது திராம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து இந்நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.


சிறு இலை நோய்: இந்த நோய் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும் இலைகள் சிறுத்தும் காணப்படும். இந்தச் செடிகள் பூக்காமல் மலடாக இருக்கும். இது, நச்சுயிரி வகை நோய். இந்த நோய் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிட வேண்டும்.


இந்தத் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடித்தால் கத்திரி சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்'.

0 comments:

 
back to top