ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார்.
சினிமா படவிழா
தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:–
அன்புக்காக...
‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடம் பிடித்து எடுத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கும்.
இந்த காலதாமதம் கூட வெற்றிக்கு வழி வகுக்கும். இதுதான் வேண்டும் என்று நம்புவதே அபூர்வம். என் சொற்ப அனுபவத்தில் கூறுகிறேன். நான் நம்பி எடுத்த படங்கள் 90 சதவீதம் தோற்றதே இல்லை.
வெற்றி
நாம் சிரித்து நாம் அழுது எடுத்த படங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையும் இப்படி தான். நம்பிக்கை இருந்தால் ஜெயித்து விடலாம்.
அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கும் போது, ‘நீங்களே அதிக உயரம் இல்லை குள்ளமாக நடிப்பதில் என்ன இருக்கிறது. அமிதாபச்சன் குள்ள மனிதராக நடிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்’.
மெல்லிய கோடு
பருவத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் நடுவில் மெல்லிய கோடு இருக்கிறது. அதை நம்பி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
நடிகர் வினய் முதன் முதலாக என்னை பார்த்த போது தடுமாற்றத்தால் எனக்கு வாழ்த்து சொன்னதாக தெரிவித்தார். உங்கள் வாழ்த்து நிச்சயமாக எனக்கு வேண்டும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை
வெற்றி வரும் போது தன்னம்பிக்கையும் வரும். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். கைத்தட்டலுக்கு எப்போதுமே பலம் உண்டு. ரசிகர்களின் கைத்தட்டல்தான் நடிகர்களுக்கு உண்மையான சம்பளம். மற்றதெல்லாம் வரியாக போய்விடும்’’. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா நடிகர்கள் பார்த்திபன், உதயநிதி, ஜீவா, வினய் நடிகைகள் திரிஷா, ஆன்ட்ரியா இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டைரக்டர்கள் பாலா, சுசீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபர்கள் தமிழ் குமரன், வி.ராமதாஸ் ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள். டைரக்டர் அகமது நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment