.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

0 comments:

 
back to top