.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

தமிழ் சினிமாவின் வளரும் படங்கள் - 2014




 கார் மீது காதல்!

தமிழ்சினிமாவில் குறும்பட இயக்குநர்கள் மீதான வெளிச்சம் பரவிக்கிடக்கும் சீசன் இது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக எடுத்த குறும்படமொன்றைத் தழுவி ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் . இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடியவரும் கூட.

படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. கிராமத்துப் பண்ணையாரான ஜெய்பிரகாஷ், அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ‘பத்மினி ‘கார் ஒன்றை வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாது.

இதனால் அந்த ஊரில் கார் ஒட்டத்தெரிந்த விஜய்சேதுபதியை தனது ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். விஜய் சேதுபதிக்கு அதே ஊரைச்சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் காதல்.

 காதல் வந்ததாலும் ஓட்டுநர் வேலையை மறக்காமால் இருக்கும் சேதுபதியின் ஓட்டுநர் வேலைக்கு, பெரிய ஆப்பு வைக்கிறார் பண்ணையாரின் மகள். தனக்கு சீதனமாக அப்பாவின் பத்மினிக்காரை வாங்கிப் போகிறார் மகள். முதன்முதலில் வாங்கிய காரை பறிகொடுக்கும் பண்ணையாரும், வேலையை இழக்கும் விஜய் சேதுபதியும் சோகமாகிறார்கள்.

இதன்பிறகு கார் அவர்களிடம் திரும்பி வந்ததா இல்லையா என்பதை நகைச்சுவையும் சென்டிமெண்டும் கலந்து சொல்லியிருக்கிறார் அருண்குமார். படத்தில் பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரது மகளாக சினேகாவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் இந்தப் படமும் ஹிட் அடிக்கும் என்கிறார்கள்.

ஆடு புலி ஆட்டம்!

விஜய் நடித்த துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து கலைப்புலி எஸ். தாணு தயாரித்துவரும் படம் ‘நேர் எதிர்’. தயாரிப்பாளர், இயக்குநர், கேயாரின் முதன்மை உதவியாளர் ஜெயபிரதீப் எழுதி, இயக்கியிருக்கிறார்.

ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுடன் பார்த்தி தமிழ்சினிமாவுக்கு புதிய வில்லனாக அறிமுகமாகிறார். ‘நேர் எதிர்’ ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஒரே இரவில் நடக்கும் கதை. “உலகில் மனிதனைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்திலிருந்து மாறியதில்லை.

புலி புல்லைத் தின்னாது; வேட்டையாடவே செய்யும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒரு மனிதன் எப்போது புலிபோல பதுங்குவான்,எப்போது சிங்கம்போல வேட்டையாடுவான். எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போலவிஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது.

எல்லா விலங்குகளின் குணத்தையும் தனக்குக்கொண்டவனாக இருக்கிறான். ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர் எதிர் ஆக மனிதன் மட்டுமே இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு 5 கதாபாத்திரங்களை பின்னியிருகிறேன்.

படத்தில் வரும் ஐந்து பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.”என்கிறார் நேர் எதிர் இயக்குநர் ஜெயபிரதீப்.

காதல் முக்கோணம்

வெளிப்புறப் படப்பிடிப்புக்கான சாதனங்களை வழங்கி வரும் ரவிபிரசாத் ’அவுட்டோர் யூனிட்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. ‘நான் ஈ’ புகழ் நானி, -நித்யா மேனன் இணைந்து நடித்து வெற்றிபெற்ற "அலா மொதலயிந்தி" என்ற தெலுங்குப் படத்தை தமிழுக்கு ஏற்ப சற்று கதையை மாற்றி ரீமேக் செய்து வருகிறார்கள்.

‘கடல்’ பட நாயகன் கௌதம் கார்த்திக் , ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை ரவி தியாகராஜன் இயக்கி வருகிறார்.

மூன்று இளம் இதயங்கள் மத்தியில் நடத்தும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்த என்னமோ ஏதோ. காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால், சாலை விபத்தில் சிக்கிக்கொள்ளும் கௌதம், தனது காதல் கதையை சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறதாம் கதை.

“காதல் எப்போது எப்படி வேண்டுமானாலும் தனது விளையாட்டுக்கு மனிதர்களை பொம்மைகள் ஆக்கிவிடுகிறது. இதில் காதலின் விளையாட்டை இதுவரை தமிழ்ரசிகர்கள் கண்டிராத முக்கோணக் காதல் கதையாக சொல்லியிருக்கிறேன்” என்கிறார் ரவிதியாகராஜன்.

0 comments:

 
back to top