.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 13, 2013

உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்


உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும்.

வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

தவளையும் ..கொக்குகளும்.........குட்டிக்கதை



மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

தவளையும் ஒப்புக் கொண்டது.

அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...

மரமும் ..கிளியும்.........குட்டிக்கதை



பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.

Thursday, September 12, 2013

கோபம் கொண்டால்? - குறுங்கதை!

 
 
 
       ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.
 
 
     அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன், ஒழுங்காக இருக்கிறேன் என சொன்னான். அவனை பாசத்துடன் அனைத்து நீ கொபப்பட்டதால் நான் சுவற்றில் அறைந்த ஆணிகளை நீயே பிடுங்கி எடுத்து விடு என சொன்னார். அவனும் நாள் முழுசும் கஷ்டப்பட்டு அந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கினான். ஆனால் அந்த சுவர் முழுசும் அந்த ஆணிகள் அறைந்த தழும்புகள் அப்படியே இருந்தன. அந்த சிறுவன் சுவற்றின் தழும்புகளை தந்தையிடம் காட்டி அழுதான். ஆணிகளை பிடுங்கி விட்டேன். ஆனால் அதன் அடையாளம் இருகிறதே என வருத்தத்துடன் சொன்னான். அவனது தந்தை, கோபமும் இதைப் போல தான் மகனே, கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது என்றார். 
 
 
நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.

 
back to top