
முகநூல் எனத் தமிழ் எழுத்தாளர்களால் வழங்கப்படும் ஃபேஸ்புக்கில் தமிழ் சார்ந்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. முகநூலில் பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பவனாகவே பங்குபெறும் எனக்கு ஒரு சில விஷயங்களில் மட்டும் நேரடியாகப் பங்குபெறுவதற்கான உந்துதல் ஏற்படும். மொழி சார்ந்த விவாதங்கள் அவற்றில் ஒன்று. ஒருநாள் காலையில் தொன்மம் என்னும் சொல் குறித்துக் கவிஞர் பெருந்தேவி போட்டிருந்த பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது. “ ‘மித்’(myth) என்கிற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை / உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்” என்று தொடங்கும் அந்தப் பதிவைச் சற்றே சுருக்கி இங்கே தருகிறேன். “தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது. ‘தொல்’, அது சுட்டும்...