.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...




உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.


வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது.  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.


புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.  புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.


விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடு


சென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால்  சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும். 


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.


மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.


புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.


விடிய விடிய சிறப்பு பஸ்கள்


புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!







என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


வைரம்

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.

அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.

வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்


சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.

பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.

ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.

இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.

ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.

ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!




மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!

1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும்.

பருத்தி, கத்தரிக்காய் என தொடங்கி அனைத்து தாவரங்களும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை விளைவிக்கும் நிலங்களுக்கும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்புகள் உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆரஞ்சுப் பழத்திற்கு தவளையின் மரபணுவை இணைத்து பளபளப்பை கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இதுகுறித்து முறையாக பரிசோதிக்கப்பட்டதாக பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் கூறினாலும், அத்தகைய ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதன் மூலம் அதன் மொத்த சந்தையும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்திடம் சென்றுவிடும் என குற்றம்சாட்டப்படுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேசிய அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணைய சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி மக்களவையில் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வாசுதேவ் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உணவுப் பொருள் தேவை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விதிமுறைகளை உள்ளடக்கியது. குறிப்பாக மரபணு மாற்ற பயிர்களை அனுமதித்தல், அதன் தன்மைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையம், மரபணு மாற்ற பயிர்கள் குறித்த அனைத்து விவகாரங்களையும் கையாளும். உடல்நல பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

நீதிமன்றத்தை அணுக முடியாது!

மரபணு மாற்ற பயிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பிரச்னை எதுவாயினும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் முறையிட முடியும். அதேநேரத்தில் மரபணு மாற்ற பயிரால் பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆண்டுகளுக்குள் ஆணையத்திடம் முறையிட வேண்டும். அதன்பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால் அந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. மரபணு மாற்ற தொழில்நுட்ப பிரச்னையில் நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது. ஆணையம் அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழும் தகவல்களைப் பெற முடியாது.

விவசாயம், வனம், மீன்வளம், உடல்நலம், கால்நடை, சுற்றுச்சூழல் என தனித்தனி துறைகளில் ஒழுங்காற்றுப் பிரிவுகளை அமைக்க இந்த மசோதா வழி செய்கிறது. மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே ஆராய தனி குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் என சட்ட மசோதா கூறுகிறது.

மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்கும் இந்த மசோதா, முழுக்க முழுக்க அறிவியல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தது. இதில் வேளாண்துறைக்கோ, சுற்றுச்சூழல் துறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அப்போது உறுப்பினர்கள் தெரிவிக்கும் திருத்தங்களை கருத்தில்கொண்டு, மசோதா திருத்தப்படும். பின்னர் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்படும்.

உணவே மருந்து என்றார் திருமூலர். ஆனால் இன்று உணவை விஷமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கலக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்குமா, மத்திய அரசு செவி சாய்க்குமா, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் உணவு உணவாகவே கிடைக்குமா இல்லை ஆரஞ்சு தோற்றத்தில் இருக்கும் தவளையை நாம் எதிர்காலத்தில் உண்ண வேண்டியிருக்குமா?!................ மரபணு மாற்றம் வரமா? சாபமா? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

 
back to top