.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 1, 2014

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!




   
இன்பமே துன்பம்:-

நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

தரமுள்ள மனிதன்

இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

திட்டமிட்ட செயல்பாடுகள்
அன்பான அணுகுமுறை
மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
அனுசரித்து விட்டுக் கொடுப்பது
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
என எண்ணுகிறாரோ, அதே போல்
மற்றவர்களிடம இருப்பது

இதுபோல் பல கூறலாம்.

தேவை மாற்றம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்

பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!




கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.


ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.


போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.


உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.


பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?



நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.


மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள்.


அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.


கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர்.


பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.


அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது.


ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.


ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.


ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

ஆய்வுக் கட்டுரை... காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)....




மேஷம்


இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.


கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி


கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு


இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்


மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

 
back to top