.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 11, 2014

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதது



ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. 

(கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். 

இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். 

காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். 

அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

“கல்லா கட்டவில்லை ஜில்லா''

 


விஜய் நடித்து வெளியான ஜில்லா படம், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் செலவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டுள்ள மதுரை விநியோகஸ்தர்கள், எதிர்பார்த்த அளவு ஜில்லா படம் கல்லா கட்டாததால், தகவல் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகவும், தேவையற்ற காட்சிகளை நீக்கி, படத்தை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததால், ஒரு குழு சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது.


அதே நேரம் அஜீத் நடித்து வெளியாகியுள்ள வீரம் படம் மதுரை பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், அஜீத்தின் முந்தைய ஆரம்பம் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்காவிட்டாலும், விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ரசிகர்களிடையே, “கல்லா கட்டவில்லை ஜில்லா; சோரம் போகவில்லை வீரம்” என்ற குறுஞ்செய்திகள் அதிக அளவில் பரப்பப் பட்டு வருகின்றன.

Friday, January 10, 2014

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!




இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது.

இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை.

இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

 மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது

சுவாமி விவேகானந்தர் - ஒருவரின் பண்ணை வீட்டில் ?




ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

 
back to top